×

வாக்குப்பதிவு நேரம் காலை 7 - இரவு 8 என அச்சடிப்பு கன்னியாகுமரி தொகுதியில் தவறான தகவல்களுடன் பூத் சிலிப் விநியோகம் பயிற்சி அதிகாரிகளால் குழப்பம் நீடிப்பு

நாகர்கோவில், ஏப். 18:  கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்ற பூத் சிலிப்புகளில் வாக்குப்பதிவு நேரம் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை என்று குறிப்பிட்டு விநியோகம் செய்யப்பட்டுள்ளதால் வாக்காளர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக வாக்காளர்களுக்கு வீடு வீடாக பூத் சிலிப்புகள் விநியோகம் செய்யப்பட்டது. அதில் மக்களவை பொது தேர்தல், சட்டமன்ற தொகுதி, பெயர், பாலினம், வாக்காளர் அடையாள அட்டை எண், பாகம் எண், பாகத்தின் பெயர், வரிசை எண், வாக்குச்சாவடி பெயர், வாக்குப்பதிவு தேதி, போன்ற விபரங்களுடன் வாக்காளர் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது. புகைப்படத்திற்கு கீழ் வாக்குப்பதிவு நேரம் என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் காலை 7 மணி முதல் மாலை 8 மணி வரை என்று அச்சடிக்கப்பட்டுள்ளது.

மதுரை மக்களவை தொகுதியில் மட்டும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக வாக்குப்பதிவு நேரம் 2 மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டும் இரவு 8 மணி வரை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் உள்ள பிற வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நேரம் அதிகரிக்கப்பட்டது போன்ற தகவல்கள் ஏதும் இல்லை. தேர்தல் ஆணையரும் வாக்குப்பதிவு நேரம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை என்று அறிவித்துள்ளார். 6 மணிக்கு மேல் வாக்குச்சாவடிக்குள் வந்து வரிசையில் காத்திருக்கின்ற வாக்காளர்களுக்கு ேடாக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க ஏற்பாடும் செய்யப்படும் என்று கலெக்டர் அறிவித்திருந்தார். ஆனால் வீடு வீடாக வழங்கப்படுகின்ற பூத் சிலிப்புகளில் வாக்குப்பதிவு நேரம் காலை 7 மணி முதல் மாலை 8 மணி வரை என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் தெளிவாக அச்சடிக்கப்பட்டுள்ளதால் வாக்காளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

தவறாக அச்சடிக்கப்பட்ட இதனை தேர்தல் அதிகாரிகள் சரிபார்க்காமலேயே வீடு வீடாக வாக்காளர்களுக்கு விநியோகம் செய்துள்ளனர். இதனால் பல்வேறு பகுதிகளிலும் வாக்காளர்கள் இரவில் கூட சென்று வாக்குப்பதிவு செய்யலாம் என்று திட்டமிட்டுள்ளனர். கடைசி நேரத்தில் விநியோகம் செய்யப்பட்டுள்ள பூத் சிலிப்புகள் பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.  கன்னியாகுமரி மக்களவை தேர்தலை பொறுத்தவரையில் பயிற்சி நிலையில் உள்ள அதிகாரிகளால் பல்வேறு குழப்பமான நிலைகள் ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்பட்டு வருகிறது. வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகளில் இருந்தே தொடங்கிய குளறுபடிகள் இப்போது பூத் சிலிப் வரை சென்றுள்ளது. இந்த நேர மாற்றம் தொடர்பாக உண்மை நிலையை விளக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளோ, உதவி தேர்தல் அலுவலர்களோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : booth chilip distribution training staff ,constituency ,Kanyakumari ,
× RELATED தென் சென்னை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் இடிதாங்கி பொருத்தம்..!!